வாசுகி ஜெயபாலன்

Sunday, August 26, 2007

தமிழ் இசை அல்லது கர்நாடக இசை கற்றலிலும் கற்பித்தலிலும் ஒரு புதிய பார்வை

அன்று தொட்டு இன்று வரை தமிழ் இசை அல்லது கர்நாடக இசை கற்பித்தலிலும் கற்றலிலும் நாம் யாவருமே ஒரே குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுகின்றோம்.

ஏன் இந்த நிலமை?

ராகம் பாடுதல், ஸ்வரம் பாடுதல் யாவுமே கல்லில் நார் உரிப்பது போன்று ஏன் இருக்க வேண்டும்?

கடந்த 21 வருட கால இசை கற்பிக்கின்ற அனுபவங்களோடு நான் மேற்கொண்டு வருகிற சில பரிசோதனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

நிலை-1

உடல் - உள்ளம் பாடத்தயாராக்குதல்

நான் எனது மாணவர்களுக்கு இசை வகுப்புகளை ஆரம்பிக்கும் போது ஸா பா என்று ஆரம்பிக்காமல் முதலில் தம்புராவின் இசையோடு உடல் -உள்ளம் பற்றிய அசைவை, அதாவது எழும்பி நின்று தலை,கை,கால்,தோள்மூடு போன்றவற்றை தம்புரா மீட்டும் லயத்திற்கு ஏற்ப அசைத்து, அதே நேரத்தில் மூச்சை சீராக உள்ளே இழுத்து வெளியே விடும் பயிற்சியையும் அளிப்பேன்.

நிலை -2

கடிவாளமற்ற கற்பனைக்கு தீனி போடுதல்

அதன் பின்பு எந்த வித ராக தாள கட்டுப்பாடுகளின்றி அவர்களது கற்பனைக்கேற்ப இசை மூலம் காட்டுக்குள் ஓர் வலம் வருமாறு பணித்துவிடுவேன். அதாவது அவர்கள் ஆ,ஈ,ஊ,ஏ,ஓ,ம்,ஹொ,ஹே போன்ற எழுத்துக்களை பாவித்து இசை மூலம் ஓர் வலம் வருமாறு கூறுவேன். காட்டில் ஒருவர் பின்னால் மற்றவர்கள் ஒற்றையடி பாதையில் போவது போல் இங்கு ஒருவர் இசைக்க மற்றவர்கள் அதனை திருப்பி பாடுவார்கள்.இவ்வாறு அக்குழுவில் உள்ள யாவரும் அந்த இசை காட்டுப் பயணத்திற்கு தலைமை தாங்கலாம்.

நிலை -3

பாரம்பரிய முறை மூலம் பாடுதல்

யாவரும் அமர்ந்து சப்பாணிகொட்டி ஸா பா என பாடி எமது வழமையான பல்லவியை தொடங்கி யாவற்றையும் மீட்டல், புதிய பாடல்கள் ஆரம்பித்தல்,வீட்டுப்பயிற்சி கொடுத்தல் போன்ற பாரம்பரிய முறை மூலம் பாடி முடிப்போம்.

நிலை -4

ஸ்வர பந்து விளையாடுதல்

நான் ஒரு ஸ்வரத்தை அல்லது ஒரு ஸ்வரக்கோர்வைகளை பாடி பந்துபோல் எறிந்தால் அந்த ஸ்வரபந்தை பிடித்து பாடி மற்றவருக்கு எறிவர். பின்னர் ஒவ்வொரு மாணவர்களும் தலைமை தாங்கி ஸ்வரபந்தை எறிவர்.

இதன் மூலம் ராக அறிவு,குறில்-நெடில் ஸ்வர அறிவு, ஐந்துஜாதி பற்றிய அறிவு,தாள அறிவு,ஸ்வரம் பாடும் திறமை போன்ற யாவும் பசுமரத்தாணி போன்று பதிந்து வளர்க்கப்படுகிறது.

நிலை -5

படித்ததை எழுத்தில் எழுதல்

இறுதியாக ஸா பா என பாடி முடித்து, அன்று பாடிய, படிக்கவேண்டிய பயிற்சிகளையும் அவற்றிற்குரிய அறிமுறைகளையும் எழுதி முடித்தல்.



No comments:

Consert

Consert
Vasuky Jayapalan

Blog Archive

What you thing about my web side?